அவிய.. இவிய எல்லோரும் கேளுங்க!.. டிரைவர் டூ சினிமா இயக்குனரின் கும்பாரி 5 ஆம் தேதி ரிலீஸ்!

 அவிய இவிய எல்லோரும் கேளுங்க என குமரிமாவட்ட வட்டார வழக்கில் ஒரு பாடல் வெளியாகி குமரிவாசிகளிடம் பெரும் கவனம் குவித்தது. முழுக்க குமரி மாவட்ட வட்டார வழக்கிலேயே எழுதி, பாடப்பட்ட அந்தப் பாடல் கேட்க, கேட்கத் திகட்டாத குமரி தமிழை பந்தி வைத்தது. அந்தப் பாடம் இடம்பெற்ற திரைப்படம் கும்பாரி.

வரும் 5 ஆம் தேதி கும்பாரி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதன் இயக்குனர் கெவினிடம் பேசினோம்.”கும்பாரி எனக்கு இரண்டாவது படம். நான் நடிக்கவேண்டும் என்னும் ஆசையில் தான் முதலில் சென்னைக்குப் போனேன். முறைப்படி நடிப்புப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன். ஆனால் திரைத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.இயக்குனர் ஹரிசாருக்கு டிரைவராகவும் இருந்தேன்.

அவர் காட்சிகள் எடுப்பதைப் பார்த்தே சினிமாவின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். அப்படித்தான் இயக்குனர் ஆசையும் வந்தது. எனது இயக்கத்தில் 5 ஆம் தேதி வரும் கும்பாரி படம் முழுக்க, முழுக்க காமெடி, சென்டிமெண்ட் என கமர்ஷியல் படமாக இருக்கும். கும்பாரி என்றால் குமரி மாவட்ட வட்டார வழக்கில் நண்பன் என்று அர்த்தம். குமரி கடற்கரை கிராமங்களில் இந்த வார்த்தை புளக்கத்தில் உள்ளது. நண்பனின் காதலை சேர்த்து வைக்கும் இடத்தில் வரும் பிரச்னையைத்தான் படமாக செய்துள்ளேன்.

”அவிய இவிய” எனத் தொடங்கும் பாடல் இந்தப் படத்தில் பெரிதாகப் பேசப்படும். குமரிமாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் வினோதன் அதை எழுதினார். கருங்கலைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் அதற்கு நல்ல இசையைத் தந்தார். அவிய இவிய பாடல் குமரியின் பெருமையைப் பேசும். மற்றபடி, படம் தமிழகம் முழுவதும் உள்ள மொழிநடையில் இருக்கும். குமரி மக்களுக்கு இன்னும் நெருக்கமாக உணரவைக்கும்.

அபி சரவணன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் மஹானா, பருத்திவீரன் சரவணன், ஜான் விஜய், சாம்ஸ், காதல் சுகுமார் என ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தை குமாரதாஸ் தயாரித்துள்ளார்.”என்றார்.