நயன்தாராவின் அன்னபூரணி திரை விமர்சனம்!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் அன்னபூரணி. நயனின் 75வது படம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்போடு திரைக்கு வந்திருக்கும் இந்தப் படம் ஈர்த்ததா? இதில் அலசுவோம்.

கதைக்களம்

ஸ்ரீரங்கத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. பொறியியல் படித்த அவரது தந்தை ஸ்ரீரங்கம், பெருமாள் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடவுளுக்கு அவர் தான் நைவேத்தியமும் செய்வார், சிறுவயதில் இருந்தே சமையல் கலையில் ் தனித்திறமை பெற்றவர் நயன். அதனால் வளர்ந்து பெரிய செப் ஆக வேண்டும் என ஆசைப்படுகின்றார். இந்தியாவிலேயே பெரிய செப்பான சத்யராஜை தன் ரோல்மாடலாக நினைக்கிறார்.

கேட்டரிங் படிக்க ஆசைப்பட்ட அவருக்கு அவரது குடும்பம் முட்டுக்கட்டைப் போட்டது. பிராமணக் குடும்பத்தில் பிறந்துவிட்டு கேட்டரிங் படித்தால் அசைவம் சமைக்க வேண்டும் என அவரது குடும்பம் முட்டுக்கட்டைப் போடுகின்றது. இதனால் எம்.பி.ஏ சேர்ந்ததாக பொய் சொல்லிவிட்டு கேட்டரிங் காலேஜில் சேர்கின்றார் நயன்தாரா. விரும்பிய துறையில் அவர் ஜெயித்தாரா? பெருமாளுக்கு கைங்கர்யம் செய்யும் நயனின் அப்பா அவரை ஏற்றாரா? நயனில் லட்சியத்தில் வந்த இடையூறுகளை வென்றாரா? என விரிகின்றது திரைக்கதை.

பிளஸ்:

படத்தில் நயனின் நடிப்பு ப்ளஸ். ஜோடியாக வரும் ஜெய் சில காட்சிகளே வந்தாலும் மனதில் தங்குகின்றார். சத்யராஜ், நயனின் அப்பா பாத்திரத்தில் வருபவர், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். தமனின் பின்னணி இசை படத்திற்குப் பலம் சேர்க்கின்றது. ”பிறக்கும்போதே நான் செப் ஆகும் தகுதியை இழந்துட்டேன் என சொல்லும் இடம், பஸ் கண்டக்டர் எல்லாரும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது என நயனின் தாய் ரேணுகா சொல்லும்போது, பிடிச்சதை செஞ்ச லட்சத்துல ஒருத்தர் இல்ல லட்சம் பேருமே சூப்பர் ஸ்டார் ஆகலாம்” என பதிலுக்கு நயன் சொல்வது உள்பட பல இடங்களில் அருள் சக்தி முருகன் வசனங்களில் ஈர்க்கின்றார்.

முஸ்லீம் இளைஞராக வரும் ஜெய் பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைப்பது, ப்ராமணப் பெண்ணாக வரும் நயன் தாரா நமாஸ் செய்துவிட்டு பிரியாணி சமைப்பது என மத நல்லிணக்கத்தையும் ஆங்காங்கே தூவியுள்ளார் இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா. துலுக்க நாச்சியார் கதை இதில் ஒரு சோறு பதம்!

மைனஸ்

படத்தின் பின்பகுதி சற்றே பொறுமையை சோதிக்கின்றது. சமையல் கலை போட்டியை நாடே செல்போனில் ஏதோ கிரிக்கெட் மேட்ச் போல் பார்த்துக் கொண்டிருப்பதில் சினிமாத்தனம் சற்றே தூக்கல்! பின்பகுதியின் நீளத்திற்கும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

மற்றபடி, துளியும் ஆபாசம் இன்றி, இரட்டை அர்த்த வசனம் இன்றி பெண்கள் மத்தியில் தன்னம்பிக்கையைத் தூவ வந்திருக்கும் அன்னபூரணி பேமிலி ஆடியன்ஸ்க்கான புல் மீல்ஸ்!

Reviewer : N. Swaminathan