சாதிக்கத் துடிக்கும் சிறப்பு நிலை சிறுவன்! தடையாக நிற்கும் பொருளாதாரம்: நேசக்கரம் நீட்ட எதிர்பார்ப்பு.

சிறப்பு நிலைக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்பார்கள். அவர்களது அன்றாட வாழ்வை சராசரியாக எதிர்கொள்வதே அவர்களுக்கு சாதனைதான். அதற்கு மத்தியில் சிறப்பு நிலை சிறுவன் ஒருவன் தன் தடைக்கற்களை தகர்த்து சாதிக்கத் துடிக்கின்றார். ஆனால் அதற்கு அவருக்கு பொருளாதாரச் சூழல் தடையாக இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி பழனி_ தேவகி தம்பதியினரின் மகன் விஷால்(18) சிறப்பு நிலை சிறுவனான விஷால் ‘திறந்த நிலைப்பள்ளி’ (open school) வாயிலாக வீட்டில் இருந்தே படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். தொடர்ந்து வீட்டில் இருந்தே படித்து பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் ஆகிவருகின்றார். பொதுவாகவே சிறப்பு நிலைக் குழந்தைகளுக்கு வெளி உலகச் சிந்தனை இருக்காது. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை, சூழல்களை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவும் முடியாது. ஆனால் இப்படியான உளவியல் சூழலுக்கு மத்தியிலும் பெற்றோரின் முறையான கவனிப்பு, பயிற்சியாளர்களின் அக்கறை இவற்றால் தன் இயல்பையும் மீறி நீச்சலில் கவனம் குவிக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் விஷால். அவரின் அடுத்த முயற்சிக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருப்பதாக வேதனை ததும்ப சொல்கின்றனர் விஷாலின் பெற்றோர்.

இதுகுறித்து விஷாலின் தந்தை பாலாஜி பழனி நம்மிடம் பேசுகையில், “தவழ்ந்தது, நடப்பது, பேசுவது என அத்தனையையும் தாமதமாகவே செய்தான் விஷால். நாங்களும் சரியாகிவிடும் என்றே காத்திருந்தோம். 4 வயதில் சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தோம். அங்கே வருகைப் பதிவின் போது ஆசிரியை அவன் பெயரைச் சொல்லி அழைக்கும் போது “பிரசன்ஸ்” என சொல்வதற்கு பதிலாக, டீச்சர் சொல்வதை திரும்பிச் சொல்லியிருக்கிறான். அதன்பின்பு தான் அவன் பிரச்னையை நாங்களும் உணர்ந்தோம். மருத்துவம், தொடர்ச்சியான செயல்பாடுகள் என அத்தனையிலும் விஷாலை ஈடுபடுத்தினோம்.

சிறப்பு நிலைப் பள்ளியில் கல்வி!

9 வயதில் இருந்து, சென்னையில் உள்ள BRIO என்னும் சிறப்புநிலைக் குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்த்தோம். அங்கே சில தொழில்பயிற்சிகளும் சிறப்பு நிலை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். என் மகன் அந்த வகையில் மிதியடி அழகாக தைப்பான். பொறியியல் பட்டதாரியான நான், இப்போது டியூசன் ஆசிரியராக உள்ளேன். மிகவும் சாதாரண பொருளாதாரம் மட்டுமே உள்ள குடும்பம் என்னுடையது.”என பொருளாதார நெருக்கடிகளையும் விவரித்தார்.

பொதுவாகவே சிறப்புநிலைக் குழந்தைகளுக்கு புற உலகச் சிந்தனையோ, தங்கள் வலியைக் கடத்தவோ, ஆபத்தை உணரவோ முடியாது. ஆனாலும் விஷால் சிறகை விரித்துப் பறக்க வேண்டும், தன்னிச்சையாக இயங்க வேண்டும் என அவரை நீச்சல் பயிற்சியில் சேர்த்துள்ளனர் அவரது பெற்றோர். இப்போது அதில் தான் பல சாதனைகளை நிகழ்த்தும் விஷால், தன் அடுத்த சாதனைக்கு ஸ்பான்சர்ஸ் உதவியை எதிர்நோக்கி காத்துள்ளார்.

கோவாவில் செய்த சாதனை

இதுகுறித்து தொடர்ந்து பேசிய பாலாஜி பழனி,”சிறப்புநிலைக் குழந்தைகளை பொறுத்தவரை ஒருவர் வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும். எதிரே ஒருவர் நீந்தி வந்தாலும் அவர்களுக்கு ஒதுங்கி நீந்தத் தெரியாது. 6 வருடமாக விஷால் நீச்சல் பயில்கின்றான். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு கோவாவில் கடலில் 4 கிலோ மீட்டர் நீச்சலடித்தான். சிறப்புநிலைக் குழந்தைகள் என்பதால் இவர்கள் நீச்சல் அடிக்கும் போது கூடவே ஒரு பயிற்சியாளரும் செல்ல வேண்டும்.

இப்போது அடுத்த முயற்சியாக என் மகன் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை நீச்சலடித்து கடந்து சாதனை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர். இது மொத்தம் 30 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. BRIO அகாடமி தான் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கின்றார்கள். இந்த சாதனை ஏசியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்ல் பதிவு செய்யப்படும். இந்த சாதனையை பதிவு செய்ய ஏசியன் புக்ஸ் ஆப் ரிக்கார்ட்ஸில் இருந்தே அலுவலர்கள் வருவார்கள்.

சிறப்பு நிலை சிறுவன் இந்த சாதனையை நிகழ்த்துவதன் மூலம் சிறப்பு நிலைக் குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். முதலில் ஸ்கேட்டிங், பூப்பந்து விளையாட்டு என பலவற்றிலும் விஷாலுக்குப் பயிற்சி கொடுத்தோம். ஆனால் அவரால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. விஷால் நீச்சல் படித்ததன் பின்னால் ஆறு ஆண்டுகால போராட்டம் இருந்தது.

இப்போது இந்த நீச்சல் சாதனையை மார்ச் மாதம் நிகழ்த்த ஏற்பாடு செய்கிறோம். அப்போது தான் அந்தக் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் குறைவாக இருக்கும். எண்ணெய் தடவிக் கொண்டு சென்றாலும் கூட சில ஜெல்லிமீன்கள் கடிக்கும். சிறப்பு நிலைக் குழந்தைகள் வலியை உணர்வார்கள். ஆனால் கூடவே நீச்சல் அடித்து வரும் பயிற்சியாளரிடம் அதை சொல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாது. ஜெல்லி மீன்களில் இருந்து பாதுகாக்க மார்ச் மாதத்தில் இந்த சாதனை முயற்சி செய்கின்றோம். அதிகபட்சம் 16 மணி நேரம் நீந்த வேண்டியிருக்கும். இதில் ஏசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் குழுவுக்கு 40 ஆயிரம், கோவளத்தில் நீச்சல் பயிற்சிக்கு 45,000, மீட்பு படகு, அதற்கான எரிபொருள் செலவு 2 லட்சம் உள்பட மொத்தம் 4 லட்சத்து 20,000 ரூபாய் செலவு ஆகின்றது.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என் பொருளாதார பலத்தைத் தாண்டிய தொகைதான் இது. ஆனாலும் ஒரு சிறப்பு நிலை சிறுவனின் பெருங்கனவு இது என்பதால், ஸ்பான்சர்ஸ் தேடிக்கொண்டு இருக்கிறேன். நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்(சமூக பங்களிப்பு நிதி) நிதிக்கும் முயற்சித்து வருகின்றேன்.”என்றார்.

சிறப்பு நிலைச் சிறுவனின் சாதனை சிறகுகள் விரியட்டும்! வாய்ப்பு இருப்போர் துணை நிற்போம்!!
அழைப்புக்கு பாலாஜி பழனி: 9884051656