குமரி தொகுதி பாஜக வேட்பாளர் யார்? செயல்பாடுகளால் கவனம் குவிக்கும் சதீஷ் ராஜா..!

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக மிக வலுவாக உள்ளது. இந்தத் தொகுதியை குறிவைத்து பாஜகவில் பலரும் காய்நகர்த்தி வருகின்றனர். இதில் இளையரான சதீஸ் ராஜாவுக்கு கட்சி மட்டத்திலும், மக்கள் மன்றத்திலும் செல்வாக்கு கூடிவருகிறது.

கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 6 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக மிக வலுவாக உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் சதீஸ் ராஜா ஆகியோரது பெயர்கள் தேசியத் தலைமையின் கவனத்தில் பரிசீலனையில் உள்ளது.

இதில் பொன்.ராதாகிருஷ்ணனைப் பொறுத்தவரை குமரி பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிட்ட அனுபவம் கொண்டவர். 1991 முதலே, கடந்த 9 பாராளுமன்றத் தேர்தல்களில் இந்தத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனே வேட்பாளராக உள்ளார். இதுமட்டும் இல்லாமல் இம்முறையும் அவர் சீட்கேட்கிறார். இதேபோல் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனின் சொந்த ஊரும் கன்னியாகுமரி தான். இவரது தந்தை குமரி அனந்தன் இதே தொகுதியில் எம்.பியாக இருந்தவர். தமிழிசையும் இந்தத் தொகுதியைக் குறிவைக்கிறார்.

இந்தப் பட்டியலில் இளையரான சதீஸ் ராஜாவும் இடம்பெற்று உள்ளார். 39 வயதே ஆன சதீஸ் ராஜா, பாஜகவின் சிறுபான்மைப் பிரிவில் மாநில செயலாளராக உள்ளார். கோவிட் காலத்தில் ஏராளமான மக்கள் பணி செய்து, சதீஸ் ராஜா மக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகம் பெற்றுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் குமரி பாராளுமன்றத் தொகுதியில் கிறிஸ்தவர்கள் கணிசமாக உள்ளனர். சதீஸ் ராஜாவைப் பொறுத்தவரை அவர் ஆர்.சி கிறிஸ்தவ நாடார். அவரது மனைவி இந்து நாடார். இதனால் சதீஸ் ராஜா களம் காணும்பட்சத்தில் பாஜகவுக்கு வெற்றிப் பக்கத்தில் இருப்பதாக கணிக்கிறது பாஜக தலைமை. இதனால் இம்முறை இளையவரா சதீஸ் ராஜாவும் களத்தில் உள்ளார்.

இருந்தும், பாஜகவுக்கு மிக செல்வாக்குமிக்க இத்தொகுதியில் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது தலைமைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!