வீட்டு சுப நிகழ்வுகளின் சமையலில் பாகற்காய் இடம்பெறாதது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!

கல்யாண வீடு என்றாலே நாமெல்லாம் குஷியாகிவிடுவோம். சொந்த பந்தங்கள், நண்பர்களைப் பார்க்கலாம் என்பதையெல்லாம் தாண்டி திருமணம் என்றதுமே தடபுடல் விருந்துகளே நம் நினைவுக்கு வரும். பத்துக்கும் அதிகமான காய்கறிகள், சாம்பார், பருப்பு, ரசம், மோர் என அமளிதுமளிப்பட்டுவிடும். ஆனாலும் இதில் மிஸ்ஸாகும் ஒரே ஒரு காய்கறி எது தெரியுமா? அதுதான் பாகற்காய்!

அதன் கசப்பு சுவைதான் அதற்குக் காரணம். திருமணம் இருமனங்கள் இணையும் இனிப்பான விழா. அதில் கசப்பான பாகற்காயோடு தொடங்கக் கூடாது என்பதால் தான் நம் முன்னோர்கள் அதை ஒதுக்கிவைத்தார்கள். அதேபோல் பாகற்காய் தின்றாலே நம் முகம் அஷ்டகோணல் ஆகிவிடும். திருமணவீட்டில் அப்படி மூஞ்சி இருந்தால் நன்றாகவா இருக்கும்? அதேநேரத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கப்படும் திதியில் பாகற்காயை இலையில் வைப்பதும் முக்கியமான ஒன்று.

நம் புராணத்திலும் பாகற்காய் முக்கியத்துவம் பெறுகிறது. வசிஷ்ட முனிவர் ஒருமுறை தனதுவீட்டுக்கு உணவு சாப்பிட வரும்படி விஸ்வாமித்ரரை அழைத்து இருக்கிறார். விஸ்வாமித்ரரோ 1000 காய்கறிகளை சமைத்துவைத்தால் மட்டுமே சாப்பிட வருவதாகச் சொல்லியிருக்கிறார். வசிஷ்ட முனிவரின் மனைவி வெறுமனே பாகற்காய், பிரண்டை, வாழை, பலாக்காய் மட்டுமே சமைத்தாராம். விஸ்வாமித்ரரும் ருசியாய் சாப்பிட்டு திருப்தியோடு போனாராம். சமையல் சாஸ்திரப்படி வாழை எட்டு காய்களுக்கும், பிரண்டை முன்னூறு காய்களுக்கும், பலா 600 காய்கறிகளுக்கும், பாகற்காய் நூறு காய்க்கும் சமமாம். இப்போ பாருங்க விஸ்வாமித்திரர் 1008 காய்கறியோடு சாப்பிட்டு போயிருக்கிறார்.

இதேபோல் விசேச வீடுகளில் மட்டுமல்ல, சித்த, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொண்டு பத்தியம் இருப்பவர்களும் பாகல் சாப்பிடக் கூடாது. அது மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும். சாதாரண காலங்களில் வீடுகளில் சமைக்கும் போது அடிக்கடி பாகற்காயை சமையலில் எடுத்துக்கொள்வது நல்ல பலன் கொடுக்கும்.