முன்னாள் குடியரசுத் தலைவர் படித்த பள்ளியில் நன்முயற்சி.. ஸ்மார்ட் வகுப்பறையால் பலம் பெறும் மாணவர்கள்!

மிக எளிய குடும்பத்தில் பிறந்து கல்வி ஒன்றையே ஆயுதமாக்கி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தவர் அப்துல் கலாம். விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், சூழல் காப்பாளர், மரம் நடும் விழிப்புணர்வை விதைத்தவர், அதிகமாக மாணவர்களிடம் உரையாடியவர் என அவரது சாதனைகள் மிக அதிகம். அவரைப் போல் பல சாதனை மனிதர்களை உருவாக்கும் முனைப்பில் அவர் பயின்ற பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைந்துள்ளது தனியார் நிறுவனம் ஒன்று!.

இராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தான், நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயின்ற பெருமைக்குரிய பள்ளி. அவரது 92 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பயின்ற பள்ளியில், குறிப்பாக அவரைப் போல் பல மாணவர்களை உருவாக்கும் முனைப்பில் ஆக்கப்பூர்வமான பணிகளை எக்ஸ்போறியா நிறுவனம் செய்து வருகின்றது. அந்தவகையில் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கண் பார்வை பரிசோதனை செய்தனர். அதன் அடுத்தகட்டமாக எக்ஸ்போறியா நிறுவனத்தின் சார்பில் இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையும் திறக்கப்பட்டது.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இதன் தொடக்க விழா நிகழ்வுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தமிழகக் காவல்துறையின் ஓய்வுபெற்ற தலைவரும், இளையோரை மிகச்சிறப்பாக ஊக்குவிப்பவருமான முனைவர் சைலேந்திர பாபு இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் சைலேந்திரபாபு பேசுகையில், “ராமநாதபுரம் மண் புண்ணியம் நிறைந்த பூமி. நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இங்கு படித்துத்தான் உலகம் முழுதும் போற்றும் ஒப்பற்றத் தலைவராக உயர்ந்தார். இந்தத் தலைமுறையினர், வேகமாக ஓடும் இன்றைய தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ள ஏதுவாக, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த வகுப்பறையைத் தேர்வுசெய்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு மின்னணு திரையில் கல்வி கற்றிடும் வகையில் தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு படிக்கும் மாணவர்கள் அப்துல்கலாமுடன் அமர்ந்து படிப்பதுபோல் சிந்தனையை ஏற்படுத்தும்வகையில் இந்த வகுப்பறை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு இருக்கும் மாணவர்களாகிய ஒவ்வொருவரும் முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். அப்போதுதான் உங்களின் சாதனைகளால் உங்களை மற்றவர்கள் நேசிப்பார்கள். அந்த உன்னத நிலையை, அனுபவ ரீதியான வார்த்தையை உண்மையாக்கிக் காட்டியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். கூகுள் போன்ற பெரு நிறுவனங்களில் சுந்தர் பிச்சை போன்ற எண்ணற்ற தமிழர்கள் இன்று உலக அளவில் சாதிக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் கல்விதான்!”என்றார்.

இந்தப் பள்ளி வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் திருவுருவப் படத்தையும் சைலேந்திர பாபு திறந்துவைத்தார்.இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரை, எக்ஸ்போறியா குலோப் ஆப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் சசிநாயர் மற்றும் நாகா, சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்போறியா குளோபல் அறக்கட்டளை நிறுவனர் சசி நாகா பேசுகையில், “இப்பள்ளி கலாம் படித்த பள்ளி என்பதால் என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணர்கின்றேன். மாணவர்கள் அவர்வழியில் நடக்க வேண்டும். மனித சமூகத்திற்கு பயன்படும்வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் தான் நாளை இந்தியா என்பார் கலாம். உங்கள் சக்தியே மிகப்பெரியது. உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு நீங்கள் வரவேண்டும்.”என்றார்.

முன்னதாக சைலேந்திரபாபு அவர்கள் பேசும்போது, கூகுள் சுந்தர் பிச்சை, எக்ஸ்போறியா நிறுவனர் சசிநாகா போல் வாழ்வில் உயரவேண்டும் என மாணவர்களுக்கு சுட்டிக்காட்டி அதற்கு கல்வி மட்டுமே துணைசெய்யும் எனச் சொன்னார். அதையும் தன் பேச்சின் ஊடே குறிப்பிட்ட சசி நாகா, “நன்குபடித்தால் வருடத்திற்கு கோடிகளில் சம்பளம் கிடைக்கும். எனவே அதை கெட்டியாகப் பிடித்து, படித்து உயருங்கள். அதனால் தான் எங்கள் சார்பில் ஆயிரம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, தேவையானவர்களுக்கு கண்ணாடி வழங்கியுள்ளோம். நோட்டு, புத்தகங்கள், சீறுடை, பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி என பல பணிகளை செய்துள்ளோம். இது அத்தனையும் எதிர்காலத் தலைமுறையை செதுக்க எங்களால் ஆன சிறுமுயற்சி!”என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.

You may have missed