சேவியர் கல்லூரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் : குமரி இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!

kumarifest-job-dair-news

மீண்டெழும் குமரி அமைப்பு, நபார்டு வங்கி, சுங்கான்கடையில் உள்ள சேவியர் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து குமரி திருவிழா என்னும் மூன்றுநாள் நிகழ்வை நடத்தி வருகின்றது. இந்நிகழ்வின் மூன்றாம் நாளான நாளை(சனிக்கிழமை) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதைக் குமரி இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குமரிமாவட்டம், சுங்கான்கடை தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் குமரித் திருவிழா நேற்று தொடங்கியது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் தலைமையில் நபார்டு துணைப் பொது மேலாளர் சுரேஷ் இராமலிங்கம் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நேற்று நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் பாலபிரஜாதிபதி அடிகளார், பிள்ளையார் நயினார், ஜேசு ரத்தினம், மரிய வின்சென்ட், மேஜர் ஜெயசேகர் ஞானதாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இதில் குமரியின் பாரம்பர்யத்தை வெளிக்கொணரும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு இருந்தன. குமரியின் பாரம்பர்யமான உணவுகளான பழங்கஞ்சி கருவாடு, உளுந்தஞ் சோறு, கிழங்கும், மீனும், இறைச்சி வகைகள் ஆகியவை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் குமரித் திருவிழாவில் ஒரு அங்கமாக நூற்றுக்கும் அதிகமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பாரம்பர்ய, சிறுதானிய பொருள்கள் விற்பனையாகின. இதில் தூய சவேரியார் கல்லூரி மாணவர்களும் 200க்கும் அதிகமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வைத்து இருந்தனர்.

இதில் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு பயிற்சி வகுப்பு இன்று நடைபெறுகின்றது. இதில் 60 க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொண்டு 2000க்கும் அதிகமான பணியாளர்களைத் தேர்வு செய்கின்றனர். நாளை 13 ஆம் தேதி நேரடித் தேர்வும் உடனே பணிக்கான கடிதமும் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மீண்டெழும் குமரி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பிராங்கோ கூறுகையில், “குமரி இளைஞர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. ஐடிஐ, டிப்ளமோ, தொழில் கல்வி, கலை, அறிவியல் என எந்த படிப்பைப் படித்தவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். சுங்கான்கடை சேவியர் கல்லூரியில் நாளை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன.”என்றார்.

இந்நிகழ்வில் தூய சவேரியார் பொறியியல் கல்லூரியின் தாளார் மரிய வில்லியம், துணை முதல்வர் ஜெயசிங் உள்ளிட்ட சேவியர் கல்லூரியின் அங்கத்தினர்களும், நபார்டு வங்கியும் இணைந்து முழு வேலைவாய்ப்பு பெற்ற குமரிமாவட்டமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

பட விளக்கம்: குமரி திருவிழாவில் நேற்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது

You may have missed