வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு மக்களை வஞ்சிப்பதா? இலவச சிலிண்டரில் பாரபட்சம் காட்டுவதாக பாஜக நிர்வாகி சதீஸ் ராஜா குற்றச்சாட்டு

பாஜக வர்த்தகப் பிரிவு மாநிலத் தலைவர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தவெக தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது. தவெகவின் தேர்தல் அறிக்கையில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் என்னும் பெயரில் அனைத்து மகளிருக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தது.

ஆனால் இப்போது 3 சிலிண்டர் மட்டுமே வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு பொங்கலில் இருந்தே அமல்படுத்துகிறது விஜய் அரசு. இன்னும்,நான்கு மாதங்கள் கழித்தே செயல்பாட்டிற்கு வர உள்ள ஒரு திட்டத்தை இப்போதே அறிவிப்பது இடைத்தேர்தல் உள்ளிட்ட விசயங்களை மனதில் வைத்துத்தான் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒருபக்கம் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை செய்யாத தவெக அரசு, இன்னொரு பக்கம் அதற்குக் கடுமையான விதிகளையும் விதித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் எப்படி, மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி நிர்ணயித்து வஞ்சிக்கப்பட்டதோ அதே அணுகுமுறையையே தவெக அரசும் பின்பற்றுகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 25 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதிலும் 2 கோடியே 22 லட்சத்து 91,710 குடும்ப அட்டைகள் அரிசி அட்டைதாரர்களாக உள்ளனர். நிலமை இப்படி இருக்க ஒரு கோடியே 30 லட்சத்து 16,104 குடும்பங்கள் மட்டுமே 3 சிலிண்டர் இலவசத்தை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே இதை பெறமுடியும் என்பது பெரும்பகுதி பயனாளிகளை வெளியேற்றும் தவெகவின் ஆபத்தான ஆட்டம்.
அனைத்துத் தரப்பு மக்களின் வாக்குகளையும் பெற்றுவிட்டு, வெற்றிக்குப் பின்பு தகுதி நிர்ணயிக்கும் தவெக அரசைக் கண்டிக்கிறேன். தவெக அரசு சிலிண்டர் வினியோகிக்கும் விவகாரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் பயனாளிகளாக சேர்க்கவும் வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
